சமூகவலைத்தளங்களில் நீதிபதி குறித்து அவதூறு வீடியோ: பெண் உள்பட 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டத்தில் சமூக வலைத்தளங்களில் நீதிபதி குறித்து அவதூறு வீடியோ பரப்பிய பெண் உள்பட 3 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-11-04 22:30 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி, தாராபுரம் மாஜிஸ்திரேட்டு சசிக்குமார் மற்றும் வக்கீல்கள், போலீசாருக்கு அவதூறு ஏற்படும் வகையில் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியது. இதுகுறித்து நீதிபதி அல்லி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசிலும், மாஜிஸ்திரேட்டு சசிக்குமார் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசிலும் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். சைபர் கிரைம் போலீசார் துணையுடன், சம்பந்தப்பட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர், பரப்பியவர் ஆகியோரை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வீடியோவை பதிவிட்டு பரப்பியதில் தாராபுரம் அருகே மூலனூரை சேர்ந்த வித்யா(வயது 28), உடுமலை விளாமரத்துப்பட்டியை சேர்ந்த ராம்மோகன்(37), திருப்பூர் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த நாஞ்சில் கிருஷ்ணன்(50) உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வித்யா, ராம்மோகன், நாஞ்சில் கிருஷ்ணன் ஆகிய 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் வித்யாவின் கணவர் ரகுபிரசாத் இடப்பிரச்சினை தொடர்பாக தாராபுரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்த வழக்கில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு சசிக்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜரான ரகுபிரசாத் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்பட்டதாக போலீசார் அவரை கைது செய்தனர். ரகுபிரசாத்துக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வித்யா ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது கோர்ட்டு அதை தள்ளுபடி செய்தது.

இதற்காக நீதிபதி, மாஜிஸ்திரேட்டு மீது அவதூறு பரப்பும் வகையில் வித்யா மற்றும் அவருக்கு துணையாக ராம்மோகன், நாஞ்சில் கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து வீடியோ பதிவிட்டு பரப்பியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் நேற்று கைது செய்து திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்.2-ல் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்