சட்டசபைக்கு மறுதேர்தலை சந்திக்க பா.ஜனதா தயார்; மந்திரி ஜெய்குமார் ராவல் கூறுகிறார்

சட்டசபைக்கு மறுதேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராக உள்ளதாக மந்திரி ஜெய்குமார் ராவல் கூறினார்.

Update: 2019-11-05 00:07 GMT
மும்பை, 

மராட்டியத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைப்பதற்கு போதுமான இடங்களில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் முதல்- மந்திரி பதவியை பகிர்ந்து கொள்ள விரும்பும் சிவ சேனாவின் பிடிவாதத்தை பா.ஜனதா ஏற்க மறுத்து வருகிறது. இதன் காரணமாக புதிய அரசு அமைவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில், மராட்டியத்தில் மறுதேர்தலை சந்திக்க பா.ஜனதா தயாராக இருப்பதாக அக்கட்சியை சேர்ந்த மந்திரி ஜெய்குமார் ராவல் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

துலேயில் பா.ஜனதா தலைவர்கள், அந்த மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது.

இதில் கலந்துகொண்ட பிறகு மந்திரி ஜெய்குமார் ராவல் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிவசேனாவுடன் பா.ஜனதா கூட்டணி அமைத்திருக்க கூடாது என பா.ஜனதா தொண்டர்கள் தெரிவித்தனர். பா.ஜனதா தலைவர்கள் சட்ட சபைக்கு மறுதேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். எங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். இந்த முறை நாங்கள் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்