நாகர்கோவில் பஸ் நிலையங்களில் ரூ.18½ லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 5 கடைகளுக்கு ‘சீல்’

நாகர்கோவில் பஸ் நிலையங்களில் ரூ.18½ லட்சம் வாடகை பாக்கி வைத்திருந்த 5 கடைகளுக்கு ‘சீல்‘ வைத்து மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2019-11-05 23:00 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள மாநகராட்சி ஆம்னி பஸ் நிலையத்தில் ஆம்னி பஸ் ஏஜென்சி அலுவலகங்கள் மற்றும் டீக்கடைகள் உள்ளிட்ட கடைகளை மாநகராட்சி ஏலம் விட்டுள்ளது. அந்த கடைகளை ஏலம் எடுத்த கடைக்காரர்கள் மாதந்தோறும் வாடகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். ஆனால் அந்த கடைகளில் ஒருவர் ஆம்னி பஸ் ஏஜென்சி அலுவலகம் நடத்தி வந்தார். அவர் பல மாதங்களாக வாடகை செலுத்தாமல் ரூ.5 லட்சத்து 92 ஆயிரத்து 950 பாக்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

இதேபோல் வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையத்தின் மேற்கு பகுதியில் தற்காலிக கடைகளை ஏலம் எடுத்து ஓட்டல்கள் மற்றும் டீக்கடை நடத்தி வந்த 4 பேர் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் ரூ.2 லட்சத்து 48 ஆயிரத்து 510–ம், மற்றொருவர் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 392–ம், இன்னொருவர் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 140–ம், மேலும் ஒருவர் ரூ.4 லட்சத்து 70 ஆயிரத்து 820–ம் ஆக இந்த 5 கடைக்காரர்களும் மொத்தம் ரூ.18 லட்சத்து 63 ஆயிரத்து 812 வாடகை பாக்கி வைத்திருந்தனர்.

இதையடுத்து இந்த 5 கடைகளையும் சீல் வைத்து நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் ஞானப்பா தலைமையில் வருவாய் உதவியாளர்கள் நாகராஜன், ஆனந்தராஜ், பாலாஜி, நபீஷ் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை ஆம்னி பஸ் ஏஜென்சி அலுவலகம் மற்றும் ஓட்டல்கள், டீக்கடை என 5 கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

சீல் வைக்கும்போது ஓட்டல்களில் பலர் சாப்பிட்டுக் கொண்டும், டீக்குடித்துக்கொண்டும் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டு, டீ குடித்த பின்னர் அவர்கள் அனைவரையும் வெளியேற்றிவிட்டு ‘பிளாஸ்டிக் டேப்‘களை கட்டி சீல் வைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போதும், மேற்கண்ட 4 கடைக்காரர்கள் மற்றும் ஆம்னி பஸ் நிலைய ஏஜென்சி அலுவலகத்தினர் பாக்கியாக வைத்துள்ள தொகை ரூ.18½ லட்சத்தை கட்டியதும் சீல் அகற்றப்பட்டு, அவர்கள் கடைகளை மற்றும் அலுவலகம் நடத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றனர்.

மேலும் செய்திகள்