மானிய விலையில் டிராக்டர் வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

மானிய விலையில் டிராக்டர் வழங்க விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-05 23:15 GMT
குளித்தலை,

திருச்சி உறையூர் அருகேயுள்ள லிங்கம் நகரை சேர்ந்தவர் சுரேஷ்மூர்த்தி (வயது 40). இவருக்கு சொந்தமாக வீடு மற்றும் நிலம் கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள பணிக்கம்பட்டியில் உள்ளது. இவர், தனது விவசாய பணிக்காக மானிய விலையில் டிராக்டர் வாங்குவதற்காக குளித்தலை பெரியபாலத்தில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

இதுதொடர்பாக அந்த அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்த கார்த்திக்கிடம் (26) கேட்டுள்ளார். அதற்கு அவர், மானிய விலையில் டிராக்டர் கிடைக்க தனக்கு ரூ.22 ஆயிரத்து 500 லஞ்சமாக தரவேண்டும் என்று கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சுரேஷ்மூர்த்தி, இதுகுறித்து கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

வேளாண்மை அதிகாரி கைது

அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ்மூர்த்தியிடம் கொடுத்து வேளாண்மை அதிகாரியிடம் கொடுக்கும்படி கூறினார்கள். அதன்படி, நேற்று ரசாயன பவுடர் தடவிய ரூ.22 ஆயிரத்து 500-ஐ அலுவலகத்தில் இருந்த வேளாண்மை உதவி பொறியாளர் கார்த்திக்கிடம், சுரேஷ்மூர்த்தி கொடுத்தார்.

அதை அவர் வாங்கியபோது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாமலை தலைமையிலான போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். பின்னர், அவரை கரூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்