ஆழ்துளை கிணறை மூட வேண்டுகோள் விடுத்தவரிடம் கடிந்து கொண்ட கரூர் கலெக்டர் சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு

ஆழ்துளை கிணறை மூட வேண்டுகோள் விடுத்தவரிடம், நாங்கள் என்ன ஓட்டல் சர்வர்களா...? என்று கரூர் கலெக்டர் கடிந்து கொண்டதாக ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-11-05 23:15 GMT
கரூர்,

திருச்சி மாவட்டம், மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சன் பலமணி நேர மீட்பு பணிக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுத்து மூடுமாறு அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில், கரூர் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூடியும், மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றியும் வருகின்றனர். அந்தவகையில், கரூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத 2 ஆயிரத்து 387 ஆழ்துளை கிணறுகளில் ஆயிரத்து 877 கிணறுகள் மூடப்பட்டு விட்டன எனவும், 510 ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரையாடல்

இந்தநிலையில், கரூர் மாவட்டம் செம்பியநத்தத்திலிருந்து மாவட்ட கலெக்டர் அன்பழகனை தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர் தங்களது பகுதியில் ஆழ்துளை கிணறை மூடக்கோரி வேண்டுகோள் விடுத்ததாகவும், அப்போது அவருக்கும், கலெக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த ஆடியோவில் உள்ள உரையாடல் வருமாறு:-

செல்போனில் தொடர்பு கொண்ட நபர்:- செம்பியநத்தத்திலிருந்து பேசுகிறேன் சார். எங்கள் ஊரில் போர்குழி (ஆழ்துளை கிணறு) மூடாமல் இருக்கிறது.

கலெக்டர்:- எந்த தாலுகாங்க?

நபர்:- குளித்தலை தாலுகா, தரகம்பட்டிங்க சார்.

கலெக்டர்:- வட்டார வளர்ச்சி அதிகாரின்னு (பி.டி.ஓ.) ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட எல்லாம் பேசுனா தரக்குறைவாக நினைக்கிறீர்களா?

நபர்:- இல்லைங்க சார். அவர்கிட்ட எல்லாம் தகவல் தெரிவித்து விட்டோம். அவர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கலெக்டர்:- நேரில் சென்று பார்த்தீர்களா?

நபர்: -இல்லை சார். அவர் ஆபிஸ் வரவில்லை.

கலெக்டர்:- என்றைக்கு போனீர்கள்?

நபர்:- மணப்பாறை சம்பவம் நடந்தப்பவே சொல்லி விட்டோம்.

ஓட்டல் சர்வர்களா...

கலெக்டர்:- எல்லாம் ஓ.கே. இவ்வளவு அக்கறை இருந்துச்சுனா நேரா பி.டி.ஓ.க்கிட்ட போய் சொல்லுங்கள். நான் அவர்கிட்ட பேசுகிறேன்.

கலெக்டரெல்லாம் ஓட்டல் சர்வர்களுன்னு நினைச்சுட்டீங்களா?

நபர்:- இல்லைங்க சார்.

கலெக்டர்:- வை மேன் போன... ராஸ்கல்...

இவ்வாறு அந்த ஆடியோவில் உரையாடல் முடிகிறது.

இது தொடர்பாக நிருபர்கள் கலெக்டரை தொடர்பு கொண்டபோது உரையாடலில் இடம் பெற்றுள்ளது தனது குரல் அல்ல என மறுப்பு தெரிவித்தார். இந்த ஆடியோ உரையாடல் குறித்து கரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆழ்துளை கிணறை மூட வேண்டுகோள் விடுத்தவரிடம் கலெக்டர் கடிந்து கொண்டதாக கூறப்படும் ஆடியோ பரவுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்