நண்பர் தாக்கப்பட்டது குறித்து, போலீசில் புகார் செய்தவருக்கு சரமாரி வெட்டு - 3 பேருக்கு வலைவீச்சு

நண்பர் தாக்கப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்தவருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2019-11-05 22:15 GMT
வில்லியனூர், 

பாகூர் அருகே உள்ள நிர்ணயப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தன் (வயது 40). பாகூரில் கட்டில் மற்றும் மரச்சாமான்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனும் இதே தொழில் செய்து வந்தார். இதையொட்டி இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து வியாபாரி கந்தனை மணிகண்டன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த கந்தனை, அவருடைய நண்பர் வெங்கடேஷ் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் மணிகண்டன், அவரது கூட்டாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து மணிகண்டன் உள்பட 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். தங்களை சிறைக்கு அனுப்பிய வெங்கடேஷ் மீது ஆத்திரமடைந்து அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெங்கடேஷ் நேற்று மாலை வில்லியனூரில் பள்ளியில் படித்து வரும் தனது மகன்களை அழைத்து வர மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வில்லியனூரை அடுத்த கோர்க்காடு அருகே சென்றபோது அவரை பின் தொடர்ந்து மணிகண்டனும், அவருடைய கூட்டாளிகளும் மோட்டார் சைக்கிளில் சென்று வழிமறித்து வெங்கடேசை கத்தியால் சரமாரியாக வெட்டினார்கள்.

இதில் பலத்த காயமடைந்த அவர் அலறினார். சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி விட்டு மணிகண்டனும் அவரது கூட்டாளிகளும் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கத்தி வெட்டில் காயமடைந்த வெங்கடேசை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய மணிகண்டன், அவருடைய கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்