முதல்-மந்திரி பதவி கேட்டு சிவசேனா அடம் பிடிக்க கூடாது; ராம்தாஸ் அத்வாலே பேட்டி

முதல்-மந்திரி பதவி கேட்டு சிவசேனா அடம் பிடிக்க கூடாது என்று ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

Update: 2019-11-06 00:01 GMT
மும்பை, 

மராட்டியத்தில் முதல்-மந்திரி பதவி பிரச்சினையால் பாரதீய ஜனதா- சிவசேனா கூட்டணி அரசு அமைவதில் இழுபறி நீடிக்கிறது. இந்த நிலையில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. அந்த கட்சிக்கும், சிவசேனாவுக்கும் இடையே எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் நிறைய வித்தியாசம் உள்ளது. எனவே மராட்டியத்தில் முதல்-மந்திரி பதவி என்பது பாரதீய ஜனதாவுக்கு உரிமை உடையது. அந்த பதவியை கேட்டு சிவசேனா அடம் பிடிக்க கூடாது. சிவசேனாவுக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்படலாம்.

மேலும் பாரதீய ஜனதா மந்திரி பதவிகளை சிவசேனாவுக்கு 50:50 பார்முலா படி வழங்க இருக்கிறது. சில முக்கிய பதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது. இதை தவிர்த்து சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க நினைப்பது மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிரானது ஆகும். மக்கள் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணியை தான் ஆட்சி செய்ய தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக பேச, நான் மத்திய மந்திரி நிதின் கட்காரியை சந்திக்க உள்ளேன். அவரிடம் இதுபற்றி விவாதிப்பேன். எல்லோராலும் மதிக்கப்படும் மூத்த தலைவரான நிதின் கட்காரி, இந்த நிலைமையை தீர்க்க நிச்சயமாக ஒரு வழியைக் கண்டுபிடிப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்