கெத்தை-மஞ்சூர் சாலையில், அரசு பஸ்சை வழிமறித்த காட்டுயானை - பயணிகள் பீதி

கெத்தை-மஞ்சூர் சாலையில் அரசு பஸ்சை காட்டுயானை வழிமறித்தது. இதனால் பயணிகள் பீதி அடைந்தனர்.

Update: 2019-11-06 22:30 GMT
மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல குன்னூர் வழியாக பிரதான சாலை உள்ளது. 2-வது சாலை கோத்தகிரி வழியாக செல்கிறது. 3-வது சாலை மஞ்சூர் வழியாக உள்ளது. இந்த பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புகளின் அருகில் தேயிலை தோட்டங்கள் காணப்படுகின்றன. அதனை சுற்றி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

இந்த வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, சிறுத்தைப்புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் புகுவது வாடிக்கையாகி விட்டது. இதனால் அவ்வப்போது மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்கிறது. இதனை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஆனாலும் அது குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 6.50 மணியளவில் கெத்தையில் இருந்து ஊட்டிக்கு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். எல்.ஜி. என்ற இடத்தில் 31-வது வளைவில் அரசு பஸ் திரும்பியது. அப்போது எதிரே திடீரென காட்டுயானை வந்து, பஸ்சை வழிமறித்தது. உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். மேலும் பயணிகள் பீதியடைந்தனர். இது தவிர அந்த வழியே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் சாலையிலேயே நின்றிருந்த காட்டுயானை, அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இதேபோன்று நேற்று மாலையில் கல்லட்டி மலைப்பாதையில் காட்டுயானை ஒன்று உலா வந்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்தினர். மேலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரா வனத்துறையினர் காட்டுயானையை அங்கிருந்து விரட்டியடித்தனர். இதனால் சுமார் 1 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அந்த வழியே போக்குவரத்து தொடங்கியது.

மேலும் செய்திகள்