தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உயிரை காப்பாற்ற உத்தரவிட வேண்டும் - சென்னை ஐகோர்ட்டில் உறவினர் மனுதாக்கல்

வேலூர் ஜெயிலில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள முருகனின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை உள்ளது என்றும் அவருடைய உயிரை காப்பாற்ற சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று முருகனின் உறவினர் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Update: 2019-11-06 23:15 GMT
வேலூர், 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடைய அறையில் செல்போன், சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு ஜெயிலில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

தனி அறைக்கு மாற்றப்பட்டது, சலுகைகள் ரத்து செய்யப்பட்டது ஆகியவற்றை கண்டித்தும், ஜெயிலில் அதிகாரிகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியும் முருகன் கடந்த 20 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். முருகனுக்கு ஆதரவாக அவருடைய மனைவி நளினியும் கடந்த 26-ந் தேதி முதல் பெண்கள் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

ஆனால் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குபிறகு அவர் நேற்றுமுன்தினம் உண்ணாவிரதத்தை கைவிட்டார். முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். மேலும் கடந்த 3 நாட்களாக அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.

இந்த நிலையில் முருகனின் உறவினர் தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.

அதில், “தொடர் உண்ணாவிரதம் காரணமாக முருகனின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவருக்கு ஜெயிலில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சியத்தால் அவருடைய உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே முருகனின் உயிரை காப்பாற்ற ஜெயில் அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என்று கூறி உள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்கவேண்டும்” என்றும் கூறி உள்ளார்.

அதன்பேரில் தேன்மொழி தாக்கல் செய்துள்ள மனு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வர இருப்பதாக முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்