உரம் விற்பனை நிலையங்களில் கலெக்டர் திடீர் ஆய்வு

மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கீழ் உள்ள உரம் விற்பனை நிலையங்களில் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-11-06 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கீழ் உள்ள உரம் விற்பனை நிலையங்களில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உரம் விற்பனை மற்றும் கையிருப்பு குறித்து திடீர் ஆய்வு செய்தார். அதன் பின்பு மாவட்ட கலெக்டர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையொட்டி அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 384.41 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் ஊருணிகளில் மழைநீர் பெருகி வருகிறது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற மழையினை பயன்படுத்தி மாவட்டத்தில் விவசாயிகளின் மூலம் ஏறத்தாழ 1 லட்சத்து 20 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை பணிகளுக்கு அத்தியாவசிய தேவையான வேளாண் இடுபொருட்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 250 உர விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கீழ் 134 உர விற்பனை நிலையங்களும், 116 தனியார் உர விற்பனை நிலையங்களும் அடங்கும். இதுதவிர உரம் உரிமம் பெற்ற 17 சில்லரை விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது வரை 688 டன் யூரியா, 1,848 டன் டி.ஏ.பி, 308 டன் பொட்டாஷ், 2,714 டன் காம்ப்ளக்ஸ் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் மாதத்திற்கு மொத்தம் 11,02 டன் அளவில் யூரியா தேவை என கணக்கிடப்பட்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் உரம் கையிருப்பு மற்றும் உரங்களின் விலை குறித்த விவரங்களை விவசாயிகள் எளிதில் அறிந்து கொள்ள ஏதுவாக வெளிப்படைத்தன்மையுடன் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும். மேலும் உரங்கள் சரியான விலையில் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய ஏதுவாக வேளாண்மை துறை அலுவலர்கள் மூலம் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதுதொடர்பாக மாவட்டத்திலுள்ள உரம் விற்பனையாளர் மற்றும் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான உரம் இருப்பு வைத்திடவும், விவசாயிகள் சிரமப்படாத வகையில் உரிய முறையில் வினியோகம் செய்யவும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சேக் அப்துல்லா, வேளாண்மை துறை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்