திருச்சியில் காவலர் உடல்தகுதி தேர்வு தொடங்கியது முதல் நாளில் 530 பேர் தேர்ச்சி

திருச்சியில் காவலர் உடல்தகுதி தேர்வு தொடங்கியது. முதல் நாளில் 530 பேர் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2019-11-06 23:00 GMT
திருச்சி,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத்தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்ற திருச்சி மாநகரம் மற்றும் சரகத்துக்குட்பட்ட மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், கரூர் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு உடல்தகுதி தேர்வு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆண் மற்றும் பெண்கள் 3,724 பேர் உடல்தகுதி தேர்வுக்கு தகுதி பெற்று இருந்தனர். இவர்களில் 2,473 ஆண்களுக்கு தினமும் 800 பேர் வீதம் நேற்று முதல் நாளை(வெள்ளிக்கிழமை) வரை 3 நாட்கள் உடல்தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.

முதல்நாளில் 718 பேர் பங்கேற்பு

அதன்படி முதல் நாளான நேற்று தேர்வுக்கு அழைக்கப்பட்ட 800 பேரில் 718 பேர் மட்டுமே பங்கேற்றனர். 82 பேர் தேர்வுக்கு வரவில்லை. முதல்கட்டமாக தேர்வுக்கு வந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. பின்னர், அவர்களுடைய உயரம் மற்றும் மார்பளவு அளக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இதில் 530 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் அடுத்தக்கட்டமாக உடல்திறன் தேர்வான ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்டவை நடத்தப்படுகிறது. இதேபோல் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி அடைந்த பெண்களுக்கு வரும் 9-ந் தேதி மற்றும் 11-ந் தேதி ஆகிய 2 நாட்கள் உடல்தகுதி தேர்வு நடக்கிறது. இதில் பங்கேற்க 1,251 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஆண்களுக்கு நேற்று நடத்தப்பட்ட உடல்தகுதி தேர்வினை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டு நிஷாபார்த்தீபன் ஆகியோர் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினர். தேர்வில் பங்கேற்றவர்களுக்கு தேவைப்படும்பட்சத்தில் முதலுதவி அளிக்க மைதானம் அருகே ஆம்புலன்ஸ்களும் நிறுத்தப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்