கறம்பக்குடி பகுதியில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதி நடவு பயிர்கள் பாதிக்கும் நிலையில் உள்ளன

கறம்பக்குடி பகுதியில் உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் அவதிபட்டு வருகின்றனர். நடவு செய்த நெற்பயிர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Update: 2019-11-06 22:45 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் மற்றும் ஒரு பேரூராட்சி உள்ளது. இவற்றில் 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகளாகும். மற்ற ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாக, குளம் மற்றும் ஆழ்துளை பாசனம் மூலம் விவசாயம் நடைபெறும் பகுதிகளான உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை சரியாக பெய்யாததால் கறம்பக்குடி பகுதியில் விவசாயம் பணிகள் முழுமையாக நடைபெற வில்லை.

தற்போது பருவமழை பெய்ததால் காவிரி பாசன பகுதிகளில் கிளை வாய்கால்களிலும் தண்ணீர் தடையின்றி கிடைத்ததாலும் கறம்பக்குடி பகுதியில் பாசன குளங்கள் நிரம்பின. இதனால் ஒரு போக சாகுபடியையாவது தடையின்றி செய்யலாம் என நம்பிய அப்பகுதி விவசாயிகள் நெல் நடவு பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். நடவு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

உரத்தட்டுப்பாடு

இந்நிலையில் கறம்பக்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக யூரியா உரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒன்றியத்தில் உள்ள எந்த கூட்டுறவு சங்கத்திலும் யூரியா இருப்பு இல்லை. தனியார் உரக்கடைகளிலும் தற்போது கிடைக்கவில்லை. இதனால் மேல்உரம் இட முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நடவு செய்த நெற்பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படும் நிலையும் உள்ளது.

இதுகுறித்து கறம்பக்குடி தென்னகர் பகுதியை சேர்ந்த விவசாயி சின்னப்பா கூறுகையில், நெற்பயிர்களை நடவு செய்து, 15 நாட்கள் முதல் 22 நாட்களுக்கு மேல்உரமாக யூரியா இடுவது வழக்கம். அப்போது தான் பயிர்கள் செழித்து வளரும். ஊட்டம் நிறைந்த பயிராகவும் இருக்கும். தற்போது கறம்பக்குடி பகுதியில் தற்போது சுமார் 500 ஏக்கருக்கு மேல் நடவு பணிகள் முடிந்து 3 வாரங்கள் ஆகிவிட்டன. 300 ஏக்கரில் நடவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யூரியா தட்டுப்பாடு விவசாயிகளிடம் கலக்கத்தையும், வேதனையும் ஏற் படுத்தி உள்ளது. இந்த ஆண்டு இயற்கை கை கொடுத்த போதும், உரம் தட்டுப்பாட்டால் மகசூல் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே கறம்பக்குடி பகுதியில் யூரியா தட்டுபாட்டை நீக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

மேலும் செய்திகள்