பள்ளம்துறையில் வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

பள்ளம்துறையில் வீடுகளை சூழ்ந்த மழைநீரை அகற்றக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-06 22:30 GMT
மேலகிருஷ்ணன்புதூர்,

ராஜாக்கமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளம்துறை ஊராட்சியில் லூர்து காலனியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது தாழ்வான பகுதி என்பதால் மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து வீடுகளை சூழ்ந்துவிடும். இதற்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில் தற்போது பெய்த கனமழையால் மழைநீரும், கழிவுகளும் கலந்து அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழந்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வீடுகளில் வசிக்கும் பொதுமக்களும், குழந்தைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புவிடம் நடவடிக்கை எடுக்கும்படி கூறினர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பஸ்சை சிறைபிடித்தனர்

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் நேற்று முன்தினம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால், எந்த அதிகாரியும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று பள்ளம்துறையில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்களுக்கு ஆதரவாக பள்ளம்துறை துணை பங்குதந்தை அருள்விஜய் பேசினார். மழைநீர் வடிவதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து வீடுகளை சூழ்ந்திருந்த மழை நீரை மின் மோட்டார் மூலம் ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்