திருமணத்திற்கு மறுத்ததால் தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ், காதலரை கரம்பிடித்தார்

திருமணத்திற்கு மறுத்ததால் தற்கொலைக்கு முயன்ற பெண் போலீஸ் தனது காதலரை கரம்பிடித்தார்.

Update: 2019-11-06 23:00 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாண்டுரங்கன் தொட்டியை சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மகள் நதியா (வயது 26). கடந்த ஆண்டு 2-ம் நிலை காவலராக பணியில் சேர்ந்த இவர், திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த நதியா கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு நதியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

திருமணம்

அதில், நதியாவும், மாவட்ட மோப்ப நாய் பிரிவில் பணியாற்றி வரும் பாண்டுரங்கன்தொட்டியை சேர்ந்த கண்ணன்(28) என்பவரும், கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திருமணத்திற்கு கண்ணன் மறுப்பு தெரிவித்ததாகவும், இதனால் மனமுடைந்த நதியா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் அஞ்செட்டி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்கள், நதியா, கண்ணன் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கண்ணன், நதியாவை திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார். இதையடுத்து நேற்று தேன்கனிக்கோட்டை ஸ்ரீகவிலட்சுமி நரசிம்மசாமி கோவிலில் வைத்து இரு வீட்டாரின் முன்னிலையில் கண்ணன், நதியா திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்