மதுவில் விஷம் கலந்து கொடுத்து தொழிலாளி கொலை மனைவி, மைத்துனருக்கு ஆயுள் தண்டனை

மதுவில் விஷம் கலந்து கொடுத்து தொழிலாளியை கொலை செய்த மனைவி, மைத்துனருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-11-06 22:15 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள ஜெடகானூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 45). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் இவரது மனைவி கன்னியம்மாள் (41) என்பவர், சீட்டு கட்டிய பணம் ரூ. 25 ஆயிரத்தை தனது மகள் திருமண செலவிற்காக வீட்டில் வைத்திருந்தார். அந்த பணத்தை சண்முகம் எடுத்து குடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கன்னியம்மாள், இது குறித்து தனது அண்ணன் வேடியப்பனுக்கு(52) தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி சண்முகம் வீட்டிற்கு வேடியப்பன் வந்தார். பின்னர் அவரை அழைத்து சென்று, மது வாங்கி அதில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். அதை குடித்த சண்முகம் பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேடியப்பன் மற்றும் கன்னியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி விஜயகுமாரி தீர்ப்பு வழங்கினார். அதில், சண்முகத்தை கொலை செய்த குற்றத்திற்காக வேடியப்பன் மற்றும் சண்முகத்தின் மனைவி கன்னியம்மாள் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் பாஸ்கர் ஆஜரானார். 

மேலும் செய்திகள்