கொளத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி

கொளத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் பலியானான். ஓமலூர் அருகே மர்ம காய்ச்சல் பாதிப்பால் மாணவன் ஒருவன் இறந்தான்.

Update: 2019-11-06 23:00 GMT
கொளத்தூர்,

சேலம் மாவட்டம், கொளத்தூரை அடுத்த கத்திரிப்பட்டி மூலக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ராஜா, கூலித்தொழிலாளி. இவருடைய மகன் நவநீத் (வயது 12). இவன் கொளத்தூர் அருகேயுள்ள மாங்காடு அரசு மாதிரி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மாணவன் நவநீத், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். அங்கு அவன் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தான்.

டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மர்ம காய்ச்சல்

ஓமலூரை அடுத்த கொங்காரப்பட்டி மங்காணிகாடு பகுதியை சேர்ந்தவர் அருள் முருகன். இருவருடைய மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு பரமேஷ் (11) என்ற மகன் இருந்தார். அருள்முருகன் குடும்பத்துடன் காடையாம்பட்டியை அடுத்த நாச்சினம்பட்டி ஜீவா நகரில் வசித்து வருகிறார். பரமேஷ் காடையாம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் பரமேஷ் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தான். அங்கு அவன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவன் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்