2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு சேலத்தில் 705 பேர் பங்கேற்பு

சேலத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 705 பேர் பங்கேற்றனர்.

Update: 2019-11-06 22:45 GMT
சேலம்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்புத்துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் காலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து பங்கேற்றவர்களில் 2,762 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதல்நாளான நேற்று 800 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. உடற்தகுதி தேர்விற்காக ஏராளமானவர்கள் நேற்று அதிகாலையிலேயே ஆயுதப்படை மைதானம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் காலை 6 மணி முதல் சோதனைக்கு பிறகு மைதானத்திற்குள் அனுப்பப்பட்டனர். அங்கு தேர்வாளர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு அவர்களுடைய கல்வி உள்ளிட்ட சான்றிதழ்களை அதிகாரிகள் சரிபார்த்தனர்.

உயரம் அளவீடு

இதையடுத்து தேர்வாளர்களுக்கு உயரம் அளவீடுதல், மார்பளவு அளவீடுதல் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகிய தேர்வு நடத்தப்பட்டது. இந்த உடற்தகுதி முழுவதும் வீடியோ கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த உடற்தகுதி தேர்வை சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப் குமார், சேலம் மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் ஆகியோர் பார்வையிட்டனர். இன்று(வியாழக்கிழமை) ஆண்களுக்கும், நாளை (வெள்ளிக்கிழமை) பெண்களுக்கும் உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது. மேலும் நேற்று நடந்த உடற்தகுதி தேர்வில் 705 பேர் பங்கேற்றனர். இவர்களில் 528 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு நாளை மறுநாள்(சனிக்கிழமை) நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட உடற்தகுதி தேர்வு நடைபெறுகிறது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்