அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கேட்டு சாலை மறியல்

ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-11-07 22:45 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த அக்டோபர் மாதம் மாணவர்கள் ஆரோக்கியநாதன் என்ற ஆசிரியரை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட 6 மாணவர்களை தற்காலிகமாக நீக்கம் செய்ய மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உத்தரவிட்டிருந்தார். இதனால் அந்த மாணவர்கள் யாரும் கடந்த 27 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இந்த நிலையில் நேற்று பள்ளியில் 2-ம் இடைப்பருவத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதுவதற்காக ஆசிரியரை தாக்கிய மாணவர்களில் 3 பேர் மட்டும் பள்ளிக்கு வந்தனர். இந்த நிலையில் பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவன் (பொறுப்பு) அவர்களை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இருந்து உத்தரவு பெற்று வந்தால் மட்டுமே பள்ளியில் அனுமதிக்க முடியும் என கூறினார். இதனால் அந்த மாணவர்களின் பெற்றோர்களும் சேர்ந்து வந்து ஆசிரியர்களிடம் கேட்டுள்ளனர்.

சாலை மறியல்

அதற்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு கொடுத்தால் மட்டுமே பள்ளியில் சேர்க்க முடியும் என கூறியதால் ஆசிரியரை தாக்கிய மாணவர்கள் 3 பேர் மற்றும் பள்ளியினுள் உள்ள 11, 12-ம் வகுப்பு பொது எந்திரவியலில் பயிலும் சில மாணவர்களுடன் சேர்ந்து பள்ளியின் வாசல் முன்பு திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி மாணவர்கள் அனைவரும் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் எதுவாக இருந்தாலும் பள்ளிக்குள் சென்று பேசி முடித்துக்கொள்ளுங்கள் என கூறினர். இதையடுத்து மாணவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து உள்ளே சென்றனர். அப்போது ஆசிரியர்கள் பள்ளி வளாகத்திற்குள் செல்லும்போது, மற்ற மாணவர்களை உள்ளே அனுமதித்தும் அந்த 3 மாணவர்களை மட்டும் உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவரது பெற்றோர்களும் பள்ளிவாசல் முன்பு முற்றுகையிட்டிருந்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் பெற்றோர்களை போலீசார் பள்ளி வளாகத்தை விட்டுக்கலைந்து செல்ல கூறினர். இதில் அந்த 3 மாணவர்களின் பெற்றோர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் மாவட்ட கலெக்டரிடம் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து இதற்கு தீர்வு பெறும்படி கூறினார்.

அதனை கேட்ட 3 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருச்சி- சிதம்பரம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி முன்பாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்