தொழில் அதிபர் வீட்டில் 115 பவுன் நகை கொள்ளையடித்த புதுமாப்பிள்ளை கைது

பல்லாவரம் அருகே தொழில் அதிபர் வீட்டில் 115 பவுன் நகை கொள்ளையடித்த வழக்கில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

Update: 2019-11-07 23:00 GMT
தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலை சேர்ந்தவர் ஜெயசீலன் இமானுவேல். தொழில் அதிபரான இவர், தனது சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். செப்டம்பர் மாதம் இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன், பீரோவில் இருந்த 115 பவுன் நகை, ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டான்.

மொபட்டில் தனி ஆளாக வந்து நகை, பணத்தை கொள்ளையன் அள்ளிச்சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபற்றி சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 தனிப்படைகள் அமைத்து கொள்ளையனை தேடிவந்தனர்.

கொள்ளையன் வந்த மொபட் எண்ணை வைத்து விசாரித்ததில் அது போலி என்பதும், திருட்டு மொபட் என்பதும் தெரிந்தது. கொள்ளை நடந்தபோது அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்ட செல்போன் எண்களை வைத்து கொள்ளையன் பயன்படுத்திய செல்போன் எண்ணை கண்டுபிடித்தனர். அதை வைத்து விசாரித்ததில், கொள்ளையனின் நண்பர் பெயரில் சிம்கார்டு வாங்கி இருப்பது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தனர்.

அதில் தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்தது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த ஜான்ஜோசப்(வயது 35) என்பது தெரிந்தது. பரங்கிமலையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் அவருக்கு திருமணம் நடைபெற்றதும் தெரிந்தது. புதுமாப்பிள்ளையாக மாமியார் வீட்டில் இருந்த கொள்ளையன் ஜான் ஜோசப்பை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அதில் அவர், மதுரை, சிவகங்கை உள்பட 8 இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தொழில் அதிபர் வீட்டில் கொள்ளையடித்த நகை, பணத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாகவும், மீட்கப்பட்ட பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார் எனவும் தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்