டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் மாவட்ட வருவாய் அதிகாரி எச்சரிக்கை

டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட வருவாய் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-11-07 23:00 GMT
கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காய்ச்சல் மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசிய தாவது:- கரூர் மாவட்டம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கும் உதவி இயக்குனர் அளவிலான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மண்டலங்களையும் துணை பகுதிகளாக பிரித்து வட்டாட்சியர் அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் முக்கிய பணியான கிராமந்தோறும் டெங்கு கொசுப்புழு தடுப்பு களப்பணிகள் கண்காணி்ப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் அனைத்து துறை அலுவலக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிலகங்களிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகாமல் அரசு அலுவலர்கள் கண்காணித்து கொள்ள வேண்டும்.

நடவடிக்கை

மேலும், டெங்கு தடுப்பு கண்காணிப்பு அலுவலரால் மேற்படி டெங்கு வைரஸ் பரப்பும் டெங்கு கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டம் மூலம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கலாம். கொசுத்தடுப்பு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மற்றும் ஊரக வேலை உறுதியளிப்புத்திட்ட பணியாளர்கள் மூலம் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்ற சிமெண்டு தொட்டிகளில் டெமிபாஸ் புழுக்கொல்லி ஊற்றுதல், வீட்டைச்சுற்றியுள்ள பயனற்ற பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றபொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொ) செல்வசுரபி, உதவி இயக்குனர்(பஞ்சாயத்து) உமாசங்கர் , மாவட்ட பூச்சியியல் வல்லுநர் சிவக்குமார், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் ஆனந்த்குமார், கரூர் நகராட்சி நல அலுவலர் பிரியா உள்பட அனைத்து துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்