மாமல்லபுரம் அருகே தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அடித்துக்கொலை

மாமல்லபுரம் அருகே தனியார் நிறுவன மேற்பார்வையாளர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-11-07 22:45 GMT
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த எச்சூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள அய்யப்பன் கோவில் அருகில் ஆண் ஒருவர் கை, கால்கள் உடைக்கப்பட்டு, தலை நசுங்கி ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக மாமல்லபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து மாமல்லபுரம் சரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது சட்டை பாக்கெட்டில் உள்ள அடையாள அட்டையை வைத்து, அவர் திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கொத்திமங்கலம் பகுதியை சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 53) என்று தெரிந்தது. அவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தவர் என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். பின்னர் அவரது வீட்டுக்கு சென்று விசாரணை செய்தனர். அதில் மஞ்சுநாதன் தினமும் காலை வேலைக்கு சென்று இரவு தான் வீட்டுக்கு வருவார் என்பதும், நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்ற மஞ்சுநாதன் இரவு வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது. குடும்பத்தினர் செல்போனை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் மஞ்சுநாதனின் குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியுள்ளனர். இந்தநிலையில் அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார் என்பது தெரியவந்தது.

நேற்று முன்தினம் அணுபுரத்தில் உள்ள நிறுவனத்திற்கு 4 இரும்பு கம்பிகளை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லும்போது இவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் எச்சூர் காட்டுக்கு இவரை கடத்தி சென்று ஒரு இரும்பு கம்பியை பிடுங்கி அடித்து கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யாராவது முன்விரோதம் காரணமாக அவரை அடித்துக்கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றொரு புறம் ஒரு மாதத்திற்கு முன் மஞ்சுநாதன் வீட்டின் எதிரில் கழிவுநீர் கால்வாய் அமைப்பது தொடர்பாக அந்த தெருவில் விசிப்பவர்கள் சிலர் அவரை மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மஞ்சுநாதன் திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் தன்னை மிரட்டியவர்கள் மீது புகார் கொடுத்ததாக கூறப்படுகிறது. கழிவுநீர் கால்வாய் பிரச்சினையால் இவரை யாராவது கடத்தி கொலை செய்தார்களா? எனவும் போலீசார் மற்றொரு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த இடத்தில் மஞ்சுநாதனின் இருசக்கர வாகனம் மற்றும் அதன் மேல் 3 இரும்புகம்பிகளும் இருந்தன. இதனை போலீசார் கைப்பற்றினர். மேலும் மஞ்சுநாதனை அடித்து கொன்ற இரும்பு கம்பி மற்றும் அவரது செல்போனை கொலையாளிகள் எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்