சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் 40-வது நாளாக நீடிப்பு

கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் 40-வது நாளாக நீடிப்பதால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. இதனால் ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2019-11-07 23:15 GMT
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த விசைப்படகுகளில் மீனவர்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். ஆனால் இந்த துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் சில நாட்கள் தங்கி இருந்து மீன்பிடிக்க அனுமதி இல்லை. இதன் காரணமாக சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் நீண்டதூரம் சென்று மீன் பிடிக்காமல் குறைந்த தொலைவிலேயே மீன்பிடித்து வருகின்றனர். மேலும் கட்டுமரம், வள்ளம், நாட்டுப்படகு போன்ற மீனவர்களுக்கு தொழில் பாதிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக விசைப்படகு மீனவர்களுக்கும், நாட்டுப்படகு மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்களும் ஏற்படுகிறது. குறிப்பாக பக்கத்து மாவட்டமான நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கும், சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் அடிக்கடி மோதல்கள் நடக்கின்றன.

வேலை நிறுத்தம்

இந்த நிலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி முதல் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி கேட்டு காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் 40-வது நாளாக நீடிக்கிறது.

இது குறித்து விசைப்படகு உரிமையாளர் நாஞ்சில் மைக்கேல் கூறுகையில், தற்போது மீன்பிடி தொழில் முடங்கியதால் கோழி தீவன உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அதே போல மீன் எண்ணை தயாரித்தல் மற்றும் மீன் உபபொருட்கள் தயாரித்தல் போன்ற தொழில்களும் பாதிக்கப்பட்டு உள்ளன. மீன்பிடி தொழில் முடங்கியதால் இதுவரை ரூ.500 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் நேரடியாக சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்களும், மறைமுகமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே தமிழக அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டு சின்னமுட்டம் விசைப்படகுகள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்