108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை இடமாற்றம் செய்ததை கண்டித்து பாடை கட்டி, மேளம் அடித்து போராட்டம்

எலச்சிபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தை இடமாற்றம் செய்ததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பாடை கட்டி, மேளம் அடித்து போராட்டம் நடத்தப்பட்டது.

Update: 2019-11-07 23:00 GMT
எலச்சிபாளையம்,

திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பகுதியை மையமாக கொண்டு பெரியமணலி, வையப்பமலை, மாணிக்கம்பாளையம், ராமாபுரம், கொன்னையார், இலுப்புலி, கிளாப்பாளையம், ராயர்பாளையம், கோக்கலை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் கடந்த 10 ஆண்டு காலமாக இயங்கி வந்தது.

இந்த நிலையில் தற்போது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திருச்செங்கோடு அருகே குமரமங்கலத்திற்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருப்பதால் மேற்குறிப்பிட்ட கிராமங்களில் சாலை விபத்துக்கள் ஏற்பட்டாலோ, கர்ப்பிணிகள் பிரசவத்திற்கோ மற்றும் வேறு ஏதேனும் மருத்துவம் சம்பந்தமான அவசர தேவைகளுக்கோ இதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் விபத்துக்களில் சிக்குபவர்கள் உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.

பாடை கட்டி போராட்டம்

எனவே தமிழக அரசு மீண்டும் எலச்சிபாளையத்தை மையமாக கொண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் மேளம் அடித்து, கும்மி கொட்டி, பாடை கட்டி தலையில் அடிபட்டது போல கட்டுகள் கட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.சுரேஷ் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், ரமேஷ், எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு இயக்குனர் மாரிமுத்து உள்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சமத்துவபுரம் கிளை செயலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்