சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணி மாநகராட்சி ஆணையாளர் தொடங்கி வைத்தார்

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணியை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

Update: 2019-11-07 22:45 GMT
சூரமங்கலம்,

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட நீர் மேலாண்மை திட்டத்தின் மூலம் நீர் ஆதாரம் காத்தல், மழைநீர் சேகரிப்பு, பாரம்பரிய நீர் ஆதாரங்கள், ஏரிகளை புதுப்பித்தல், நீர்நிலை மேம்பாடு, தீவிர மரம் வளர்ப்பு ஆகியவற்றின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் பழைய சூரமங்கலம் பகுதியில் 20.26 ஏக்கர் பரப்பளவு கொண்ட போடிநாயக்கன்பட்டி ஏரியில் உள்ள முட்புதர்கள் மற்றும் ஆகாய தாமரைகளை அகற்றுதல், தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு நிதி உதவியின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் ஆகாய தாமரைகள் அகற்றும் பணிகளை நேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார். அதன்பிறகு ஏரியில் படர்ந்து காணப்பட்ட ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகள் நடைபெற்றது. இனிவரும் காலங்களில் ஏரியில் ஆகாய தாமரைகள் மீண்டும் வளராத வகையில் வேர்கள் வரை முற்றிலுமாக அகற்றி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குமரகிரி

போடிநாயக்கன்பட்டி ஏரியிலுள்ள ஆகாய தாமரைகளை முற்றிலுமாக அகற்றிய பின்னர், அம்மாபேட்டை மண்டலம் 37-வது வார்டில் 39.26 ஏக்கர் பரப்பளவில் உள்ள குமரகிரி ஏரியிலுள்ள ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், செயற்பொறியாளர் (திட்டம்) பழனிசாமி, உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு, உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ், உதவி பொறியாளர்கள் அன்புசெல்வி, பால சுப்ரமணியம், மலர், சமூக ஆர்வலர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்