தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;-

Update: 2019-11-07 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொருளாதார ரீதியில் நலிவுற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சொந்தமாக தொழில்கள் தொடங்கும் விதத்தில் 25 சதவீத மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின்படி தற்போது வியாபாரம் மற்றும் சேவை சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு உச்ச வரம்பு முறையே ரூ.1 லட்சம் மற்றும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. உற்பத்தி தொழிலுக்கு உச்ச வரம்பு ரூ.10 லட்சமாகவே உள்ளது. திட்ட மதிப்பீட்டில் 95 சதவீதம் வங்கிகள் கடனாக வழங்கும். பயனாளிகள் தம் சொந்த முதலீடாக திட்ட முதலீட்டில் 5 சதவீதமும், அரசு மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை) மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் வங்கியில் இருந்து கடன் அனுமதி பெற்ற பயனாளிகளுக்கு உதவித்தொகையுடன் கூடிய ஒரு வார கால கட்டாய மேலாண்மை பயிற்சி வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் கடனுதவி பெற 18 வயதிற்கு மேற்பட்ட, அதிகபட்சம் 35 வயது வரையுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள். சிறப்பு பிரிவினரான ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு வயது வரம்பு 45 வயது வரை தளர்த்தப்பட்டு உள்ளது.

குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருத்தல் வேண்டும். நடப்பு நிதி ஆண்டிற்கு என தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதால், ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பைபாஸ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியிலோ அல்லது 0461-2340152, 2340053 என்ற தொலைபேசி எண்களையோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்