திருவள்ளுவர் மீது மதச்சாயம் பூசுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை - டி.கே.ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தல்

திருவள்ளுவர் மீது மதச்சாயம் பூசுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.கே.ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தினார்.

Update: 2019-11-07 23:00 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.30 லட்சம் செலவில் 3 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி தலைமை தாங்கினார். பழைய மாணவர் சங்க தலைவர் அய்யலுசாமி, ஆலோசகர் டாக்டர் சீனிவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் முனியசாமி வரவேற்று பேசினார்.

டி.கே.ரங்கராஜன் எம்.பி. கலந்து கொண்டு, புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் மல்லிகா, மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், நகர செயலாளர் ஜோதிபாசு, மாதர் சங்க மாவட்ட தலைவி விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியர் ராஜா சுந்தர் நன்றி கூறினார்.

தொடர்ந்து டி.கே.ரங்கராஜன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் உயர் பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு, ஏற்றுமதி வாய்ப்பு குறைவு போன்றவற்றால் வேலைவாய்ப்பின்மை 8 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. இதனை போக்குவதற்குதான் செங்கொடி இயக்கம் போராடுகிறது.

திருவள்ளுவர், பாரதியார், வ.உ.சிதம்பரனார் போன்றவர்களை அந்தந்த காலக்கட்டத்தில் வைத்து பார்க்க வேண்டும். மாறாக அவர்கள் மீது சாதி, மதச்சாயம் பூசுபவர்கள் மீது சட்டவிரோத கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்வை தவிர, மற்ற அனைத்து திட்டங்களையும் பா.ஜ.க. அரசு வாபஸ் பெற்று விட்டது. ஆனால் நீட் தேர்வை வாபஸ் பெறவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சாதகமான தீர்ப்பினை பெற்றேன். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் அந்த தீர்ப்பு மறுக்கப்பட்டு, நீட் தேர்வு சட்டப்பூர்வமாக்கப்பட்டு விட்டது.

டெங்கு காய்ச்சல் குறைந்துள்ளதாக அரசின் அதிகாரப்பூர்வ தகவல் கூறுகிறது. அப்படி குறையவில்லையெனில், அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாய்லாந்து நாட்டில் நடந்த உச்சிமாநாட்டின் வர்த்தக ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திடவில்லை. இதனால் நாம் சற்று மன நிம்மதி அடைய முடிகிறது. இல்லையெனில் நமது நாட்டின் சிறுதொழில்கள், விவசாயம் பாதித்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்