அரிச்சல்முனை சாலை தடுப்புச்சுவர் பலப்படுத்தும் பணி தீவிரம் - சுற்றுலா பயணிகள் அத்துமீறல்

கடல் கொந்தளிப்பால் சேதமடைந்த அரிச்சல்முனை சாலை தடுப்புச்சுவர் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் தடையை மீறிச்சென்று சுற்றுலா பயணிகள் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2019-11-07 22:00 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தனுஷ்கோடி. சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு கோரப்புயலால் அழிந்து போன தனுஷ்கோடிக்கு ராமேசுவரத்தில் இருந்து அரிச்சல்முனை வரையிலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 கோடி செலவில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரிச்சல்முனை வரையிலும் கார், வேன் மற்றும் பஸ் மூலமாக சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக சாலையின் தடுப்புச்சுவர் வரையிலும் ராட்சத அலைகள் எழும்பியதை தொடர்ந்து நடைமேடையின் தடுப்புச்சுவர் மற்றும் படிக்கட்டுகள் சேதமடைந்தன.

அதனை தொடர்ந்த கடந்த 18 நாட்களுக்கும் மேலாக அரிச்சல்முனை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கம்பிப்பாடு பகுதி வரை சென்று வந்தனர்.

இந்த நிலையில் அரிச்சல்முனை கடல் பகுதி தொடர்ந்து கொந்தளிப்புடன் காணப்பட்டு வருகிறது. இதையடுத்து சாலை தடுப்புச்சுவர் மேலும் சேதமடையாமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் பெரிய பெரிய கற்கள் கொட்டப்பட்டு பலப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. இதனால் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் அங்கு செல்ல தடை நீடித்து வருகிறது.

இதனிடையே நேற்று தனுஷ்கோடியை பார்ப்பதற்காக வரும் சுற்றுலா பயணிகள் போலீசாரின் தடையை மீறி கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனை வரையிலும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். இவ்வாறு சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் கடலில் இறங்கி குளித்தனர். மேலும் ஒரு சில இளைஞர்கள் அரிச்சல்முனை சாலை வளைவு பகுதியில் உள்ள அசோகா ஸ்தூபி மீது ஏறி நின்று ஆபத்தான முறையில் செல்பி எடுத்தனர். எனவே அரிச்சல்முனை கடல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் நடந்து சென்று வராமல் இருக்க போலீசார் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்