மு.க.ஸ்டாலினை பலவீனப்படுத்தவே அவதூறு பரப்புகின்றனர் - தஞ்சையில், முத்தரசன் பேட்டி

மு.க.ஸ்டாலினை பல வீனப்படுத்தவே அவதூறு பரப்புகின்றனர் என தஞ்சையில், முத்தரசன் கூறினார்.

Update: 2019-11-08 23:00 GMT
தஞ்சாவூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளால் கடன் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் அதிக வட்டிக்கு வெளிநபர்களிடம் கடன் வாங்கி விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்கு இவ்வளவு தொகைக்கு மதுவிற்க வேண்டும் எனவும், 15 நாட்களுக்கு தேவையான மதுபாட்டில்களை இருப்பில் வைக்க வேண்டும் எனவும் அரசு திட்டமிடுகிறது. ஆனால் விவசாயிகளுக்கு தேவையான உரத்தை இருப்பில் வைக்க ஏற்பாடு செய்யாததால் யூரியா உரம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

அதிக விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. உரத்தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை பொருட்களை விற்பனை விவசாயிகள், நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என விலை பொருட்களுக்கான ஒப்பந்த சாகுபடி திட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். ஒப்பந்தம் செய்தால் ஒப்பந்தப்படி விலை கிடைக்கும் என அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான இந்த சட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் அறிவித்துள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுவும் நேர்மையான முறையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.

மாநில அரசு அதிகாரிகளே தேர்தலை நடத்துவதால் ஏராளமான தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேர்தலை ஜனநாயக முறைப்படியும், நேர்மையாகவும் நடத்த வேண்டும். மதசார்ப்பற்ற ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம். திருவள்ளுவர் சிலை அவமதிப்பு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து இருந்தால் அடுத்தடுத்த சம்பவங்கள் நடைபெறுவதை தடுத்து நிறுத்தலாம். இந்த பிரச்சினையில் உறுதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயாராக இல்லை.

திருவள்ளுவர் சாதி, மதத்தை கடந்தவர். அவரை இழிவுபடுத்தும் செயலில் ஈடுபடுபவர்களை உடனே கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் எதிர் விளைவு ஏற்படும். இதனால் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டால் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் எந்த பொய்யையும் தயக்கமின்றி சொல்லக்கூடியவர். பா.ம.க. கொஞ்சம், கொஞ்சமாக கரைந்து கொண்டு இருக்கிறது. பா.ம.க.வை தக்க வைக்க பொய் சொல்லி வருகிறார்.

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் கட்டப்பட்டுள்ளது என ராமதாஸ் முதலில் கூறினார். இதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆனால் இதுவரை நிரூபிக்கவில்லை. கொள்கை ரீதியாக விமர்சனம் செய்யலாம். ஆனால் பொய் சொல்லி அரசியலில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளும் முடிவை ராமதாஸ் கைவிட வேண்டும்.

மு.க.ஸ்டாலின் மிசாவில் கைதாகி 1 ஆண்டு சிறையில் இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். சிறையில் மோசமான முறையில் அவர் தாக்கப்பட்டார். இந்த தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக அமைச்சர் பாண்டியராஜன் பேசியது கண்டிக்கத்தக்கது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகியவை உள்ளன.

இவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். வரும் சட்டசபை தேர்தலையும் இதே கூட்டணியுடன் சந்திக்க தயாராக இருக்கின்றனர். தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பலவீனப்படுத்தி விட்டால் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்களது திட்டம் வெற்றி பெறாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் பாரதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லெனின், மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிர மணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்