மத்திய, மாநில அரசுகள் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் - ஜி.கே. மணி பேட்டி

டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் என்று ஜி.கே. மணி கூறினார்.

Update: 2019-11-08 23:00 GMT
திருவெண்காடு, 

நாகை மாவட்டம் பூம்புகாரில் வருகிற ஜனவரி 4-ந் தேதி வன்னிய மகளிர் மாநாடு நடக்கிறது. இதனை முன்னிட்டு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி நேற்று பூம்புகாருக்கு வருகை தந்தார். அப்போது அவர் மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனை தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூகத்தில் பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பு, கல்வி, சமூக அந்தஸ்து ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், பெண்களை போற்றும் விதமாகவும் கண்ணகி பிறந்த புண்ணிய பூமியான பூம்புகாரில் வருகிற ஜனவரி 4-ந் தேதி வன்னிய மகளிர் பெருவிழா மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் எம்.பி., மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொள்கின்றனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் டெல்டா பகுதியில் ஷேல் கியாஸ், மீத்தேன், எரிவாயு உள்ளிட்ட விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை கொண்டு வர முற்றிலும் தடைவிதிக்க வேண்டும். மேலும் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.

தற்போது டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாய இடுப்பொருட்களான யூரியா, அடி உரங்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு வெளிநாடுகளில் இருந்து யூரியா உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரங்களை வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகையாக ரூ.9 ஆயிரத்து 500 தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆனால் இந்தாண்டு தற்போது வரையில் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்கவில்லை. எனவே மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீனவர்களுக்கு உடனடியாக நிவாரண தொகையை வழங்க வேண்டும்.

மயிலாடுதுறை பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமும், மருத்துவக்கல்லூரியும் உடனடியாக அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும். பண்டைய பாரம்பரிய நகரமான பூம்புகார் மிகப்பெரிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு சிலப்பதிகார கலைக்கூடம், நெடுங்கல் மன்றம் உள்ளிட்டவைகள் உள்ளன.

ஆனால் தற்போது சிலப்பதிகார கலைக்கூடம், கலையரங்கம், சங்குகுடில்கள் உள்ளிட்ட பழங்காலத்தை நினைவுப்படுத்தும் கட்டிடங்கள் மோசமாக காணப்படுகின்றன. எனவே தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்பு பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் வருகிற கோடை காலத்தில் விடுபட்ட ஆறுகள், குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் மாநில துணை பொதுச்செயலாளர் பழனிசாமி, துணை தலைவர் தங்க.அய்யாசாமி, முன்னாள் நிர்வாகி அய்யப்பன், நாகை வடக்கு மாவட்ட செயலாளர் லண்டன் அன்பழகன், மாவட்ட அமைப்பு செயலாளர் ராஜரத்தினம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்