சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - கலெக்டர் ஷில்பா தகவல்

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளதாக, கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

Update: 2019-11-08 22:30 GMT
நெல்லை, 

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய-மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2019-2020-ம் கல்வியாண்டில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பிளஸ்-1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவித்தொகை பெற www.sch-o-l-a-rs-h-ips.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2019-2020-ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 1 லட்சத்து 35 ஆயிரத்து 127 மாணவ-மாணவிகளுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி உதவித்தொகை மாணவ மாணவிகளின் வங்கி கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்படும். கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியான மாணவ-மாணவிகள் பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு மேற்படி இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வருகிற 15-ந்தேதி வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மாணவ-மாணவிகள் இணையதளத்தில் கேட்கப்பட்டு உள்ள அனைத்து விவரங்களையும் விடுபடாமல் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை படியிறக்கம் செய்து அதனுடன் மாணவரது புகைப்படம் மற்றும் தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கல்வி நிலையத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். ஆவணநகல்களை இணைத்து கல்வி நிலையத்திற்கு அனுப்பாத மாணவ-மாணவிகளின் இணையதள விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

இணையதளத்தில் வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை கவனமுடன் பதிவு செய்யவேண்டும். கல்வி நிலையங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களை உடனுக்குடன் பரிசீலித்து விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சான்றாவணங்களுடன் சரிபார்த்து உறுதி செய்து தகுதி பெற்ற விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்