சென்டிரல் ரெயில் நிலையத்தில் முதியவர்கள் படிக்கட்டில் ஏற தானியங்கி நாற்காலி

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் படிக்கட்டில் ஏற சிரமப்படும் முதியவர்களின் வசதிக்காக தானியங்கி நாற்காலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Update: 2019-11-08 22:20 GMT
சென்னை, 

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அந்தவகையில் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.

அதன்படி சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் முதியோர்களுக்காக நவீன தானியங்கி நாற்காலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் வரையில் இருக்கும் என கூறப்படுகிறது.

வயதானவர்கள் படிக்கட்டில் ஏறி இறங்க சிரமப்படுவதால், அவர்களுக்காக இந்த நவீன நாற்காலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி சென்டிரல் ரெயில் நிலையத்தின் முதலாவது மாடியில் உள்ள பயணிகள் காத்திருப்போர் அறைக்கு அருகில் உள்ள படிக்கட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

படிக்கட்டில் ஏற அல்லது இறங்க சிரமப்படும் முதியோர்கள் இந்த நாற்காலியில் உட்கார்ந்து, சீட் பெல்ட் மாட்டிய பிறகு, அதில் இருக்கும் ‘ஸ்விட்சை ஆன்’ செய்யவேண்டும். இதையடுத்து அந்த நாற்காலி மெதுவாக கீழிருந்து மேலாகவோ அல்லது மேலிருந்து கீழாகவோ இயங்கும்.

இது குறித்து வயதான பயணி ஒருவர் கூறும்போது, “இந்த வசதி எங்களை போல் முதியோர்களுக்கு உதவியாக உள்ளது. இங்கு ‘லிப்ட்’ வசதி இருந்தாலும், இது போன்ற புதிய வசதியுடன் கூடிய நாற்காலியில் செல்வது ஆர்வமாக உள்ளது. ஆனால் இந்த தானியங்கி நாற்காலி பயணிகள் நடமாட்டம் இல்லாத இடத்தில் ரெயில்வே நிர்வாகம் வைத்துள்ளது. யாருக்காக இந்த வசதியை ஏற்பாடு செய்துள்ளது என்பது தெரியவில்லை. ரெயில் நிலையத்தில் ஏதோ ஒரு ஓரத்தில் அமைத்திருப்பதால் இது குறித்து எந்த பயணிக்கும் தெரியவில்லை. இந்த தானியங்கி நாற்காலியை பயணிகள் நடமாட்டம் இருக்கும் ‘லிப்ட்’ அருகே உள்ள படிக்கட்டில் வைத்தால் அனைவருக்கும் தெரியும். மேலும் உதவியாகவும் இருக்கும். அந்த நாற்காலியை இயக்குவதற்கு ஊழியர்கள் யாரேனும் இருந்தால் பாதுகாப்பாகவும் இருக்கும்” என்றார்.

மேலும் செய்திகள்