மின்சார ரெயிலில் பயணிகளிடம் நகை திருடிய பெண் கைது

மின்சார ரெயிலில் பயணிகளிடம் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-08 22:30 GMT
சென்னை, 

சென்னை எழும்பூர் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் செல்போன் திருட்டு தொடர்பாக அதிக அளவில் புகார்கள் வந்ததையடுத்து இன்ஸ்பெக்டர் பத்மா குமாரி உத்தரவின் பேரில் நுங்கம்பாக்கம், எழும்பூர், பூங்கா, கடற்கரை ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் மின்சார ரெயில் பூங்கா ரெயில் நிலையம் வந்தது. அந்த ரெயிலில் இருந்து சந்தேகப்படும்படியான பெண் ஒருவர் இறங்கி 2-ம் நடைமேடையில் நடந்து வந்து கொண்டிருந்தார். போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அவரது பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 8½ பவுன் நகைகள் மற்றும் ரூ.46 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை, பாபு நகரை சேர்ந்த ஏழுமலையின் மனைவி தேவி(வயது 24) என்பதும், ரெயிலில் பெண் பயணிகளிடம் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தேவியை கைது செய்த போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த நகை மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்