திருச்சி முகாமில் தற்கொலைக்கு முயன்ற வெளிநாட்டு கைதிகள் அரசு மருத்துவமனை முன்பு திடீர் தர்ணா

திருச்சி சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ற வெளிநாட்டு கைதிகள் அரசு மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-09 23:00 GMT
திருச்சி,

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கையை சேர்ந்த 35 பேரும், வங்காளதேசத்தை சேர்ந்த 30 பேரும், பல்கேரியாவை சேர்ந்த 2 பேரும், சீனா, ரஷியா, தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்தை சேர்ந்த தலா ஒருவரும் என மொத்தம் 72 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர், போலி பாஸ்போர்ட்டில் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்தவர்கள் உள்பட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சட்டவிரோதமாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி 46 வெளிநாட்டு கைதிகள் மட்டும் கடந்த 7-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். அவர்களில் நேற்று முன்தினம் காலை 26 பேர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் முகாமிற்கு மருத்துவக்குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு மயங்கி கிடந்த வெளிநாட்டு கைதிகளை பரிசோதனை செய்தனர். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த 15 பேர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அரசு மருத்துவமனையில் தர்ணா

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே மீதம் இருந்த 11 வெளிநாட்டு கைதிகள் முகாமில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தனர். இந்தநிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேரும் நேற்று காலை மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து நுழைவு வாசல் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, “எங்கள் மீதான வழக்குகளில் ஜாமீன் கிடைத்தபிறகும், வெளியே அனுப்பாமல் முகாமில் அடைத்து வைத்துள்ளனர். எங்களை மற்றவர்களை போல குடும்பத்தினருடன் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும்” என்றனர். இதையடுத்து அங்கு வந்த அரசு மருத்துவமனை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார் அவர்களிடம், “நீங்கள் போராட்டம் நடத்துவதற்கு இது இடமல்ல. இங்கு போராட்டம் நடத்தினால் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படும்” என்று தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தை

இதனை ஏற்று அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து வேனில் சிறப்பு முகாமிற்கு சென்றனர். ஆனாலும் தங்களது கோரிக்கைக்கு முடிவு தெரியும்வரை முகாமிற்குள் நுழைய மாட்டோம் என்று, முகாமின் 2-வது நுழைவு வாயில் அருகே அமர்ந்து தர்ணா செய்தனர்.

இதையடுத்து அங்கு வந்த தனித்துணை கலெக்டர் சுதந்திரராஜ் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சிறப்பு முகாமில் நேற்று 3-வது நாளாக வெளிநாட்டு கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்ந்து வருகிறது.

மேலும் செய்திகள்