கடையநல்லூர் அருகே,பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்த போலீஸ் வாகனம்; பெண் பலி

கடையநல்லூர் அருகே பஸ்சுக்கு காத்திருந்த பயணிகள் கூட்டத்திற்குள் போலீஸ் வாகனம் புகுந்ததில் பெண் பலியானார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-11-09 23:15 GMT
அச்சன்புதூர், 

அயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டதையொட்டி, நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணிக்காக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பட்டாலியனை சேர்ந்த போலீசார் நேற்று காலை ஒரு போலீஸ் வாகனத்தில் கடையநல்லூருக்கு வந்தனர். அந்த வாகனம் கடையநல்லூரில் போலீசாரை இறக்கி விட்டு விட்டு, மீண்டும் ராஜபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியில் சென்றபோது, வாகனம் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சாலையோரம் உள்ள கொடிக்கம்பத்தில் மோதியது. அதன்பிறகும் நிற்காமல் ஓடி அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

இதில் திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த மைதீன்பிச்சை மனைவி மல்லிகா என்ற ஆயிஷா பீவி (வயது 39) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அவருடைய மகள் இர்பானா ஆசியா (15), அதே பகுதியை சேர்ந்த கன்சாள் மகரிபா பீவி (40) மற்றும் போலீஸ் வாகனத்தில் இருந்த போலீசார் முத்து, ராசுகுட்டி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

உடனே அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, விபத்து குறித்து அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் மதுரை-தென்காசி நெடுஞ்சாலையில் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘விபத்தில் பலியான ஆயிஷா பீவி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். திரிகூடபுரம் பகுதியில் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும். சாலையை விரிவுப்படுத்த வேண்டும். வேகத்தடை அமைக்க வேண்டும்‘ என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்காசி உதவி கலெக்டர் பழனிக்குமார், கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, சமூக பாதுகாப்பு தாசில்தார் ரோஷானா பேகம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் (ஆலங்குளம்) ஜாகீர் உசேன், சக்திவேல் (புளியங்குடி), பாலசுந்தர் (சங்கரன்கோவில்), தென்காசி வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் விஜய் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விபத்தில் பலியான ஆயிஷா பீவியின் உடலை சொக்கம்பட்டி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீஸ் வாகனம் மோதி பெண் பலியானதும், அதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதும் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்