கர்நாடக சட்டசபைக்கு 2020-ம் ஆண்டு தேர்தல் வரலாம்; தேவேகவுடா சொல்கிறார்

கர்நாடக சட்டசபைக்கு 2020-ம் ஆண்டு தேர்தல் வரலாம் என்று தேவே கவுடா தெரிவித்துள்ளார். மங்களூருவில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-11-09 23:30 GMT
மங்களூரு,

கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ்- ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்தது. கூட்டணி சார்பில் காங்கிரசை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை முதல்-மந்திரியாக்கும்படி நாங்கள் கூறினோம்.

இதுபற்றி காங்கிரஸ் மேலிட தலைவர்களான குலாம்நபி ஆசாத், அசோக் கெலாட் ஆகியோரிடம் தெரிவித்தோம். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவி வழங்க ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக குமாரசாமிக்கு முதல்-மந்திரி பதவி கொடுத்தனர்.

இதனால் அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற நாளில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கி குமாரசாமிக்கு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் குமாரசாமி மனபுழுக்கத்தில் இருந்து வந்தார். உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தலில் எந்த கட்சிகளுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.

மாநிலம் முழுவதும் 3 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டு உள்ளேன். சட்டசபை ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவரை நியமிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதுகுறித்த எங்கள் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி 14-ந்தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும்.

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 2020-ம் ஆண்டு தேர்தல் வரலாம். அப்போது கூட்டணி தொடர்பாக காங்கிரசின் முடிவை பொறுத்து நாங்கள் முடிவு எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்