உஷாரய்யா உஷாரு: பெண்கள் எப்போதும் ஆண்களுடனான நட்பை எல்லையோடு வைத்திருப்பது மிக மிக அவசியம்

வயது முதிர்ந்த தாயாருடன் வந்து, வக்கீ்ல் ஒரு வரிடம் விவாகரத்து தொடர்புடைய ஆலோசனை பெற்றுக்கொண்டிருந்த இளம் பெண்ணின் கையில் ஒன்றரை வயது குழந்தையும் இருந்தது.

Update: 2019-11-10 10:00 GMT
வெளிநாட்டில் வேலைபார்க்கும் கணவர், அவளை விவாகரத்து செய்யப்போவதாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அவளது கையில் இருக்கும் ‘ஸ்மார்ட் போனும்’, அவளுடன் வேலைபார்த்து வந்த உடல் ஆசை பிடித்த இளைஞன் ஒருவனும்தான் அவளது குடும்ப உறவு சிதைய காரணம்.

நடந்தது என்ன? கலங்கிய கண்களோடு அவளே விவரிக்கிறாள்..

“எனக்கு திருமணமாகி நான்கு வருடம் ஆகியிருக்கிறது. கணவர் துபாயில் வேலைபார்க்கிறார். நான் இங்கு நகை கடை ஒன்றில் விற்பனையாளர் பிரிவில் வேலைபார்க்கிறேன். செல்போனில் பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்றவைகளில் எல்லாம் எனக்கு ஈடுபாடு கிடையாது. அதனால் சாதாரண செல்போன்தான் வைத்திருந்தேன். அதில் என் கணவரோடு பேச மட்டும்தான் முடியும்.

கடந்த ஆண்டு ஊருக்கு வந்த அவர், விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஒன்றை எனக்கு பிறந்த நாள் பரிசாக வாங்கிக்கொடுத்தார். அதில் உள்ள தொழில்நுட்ப விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாது. கணவரே வாட்ஸ்-அப் போன்றவைகளை இன்ஸ்டால் செய்துகொடுத்தார். அவர் வெளிநாடு சென்ற இரண்டு மாதங்களில் எப்படியோ எனது வாட்ஸ்-அப் செயல்படாமல் போய்விட்டது.

நான் வேலைபார்த்த நிறுவனத்தில் என்னோடு திருமணமாகாத இளைஞன் ஒருவன் வேலைபார்த்துக்கொண்டிருந்தான். அவன் அங்கு வேலைபார்க்கும் எல்லா பெண்களிடமும் சகஜமாக பழகுவான். ஸ்மார்ட் போன் தொழில்நுட்பங்களையும் எளிதாக கையாளுவான். எனக்கு வாட்ஸ்-அப் கிடைக்காத தகவலை சொன்னதும் மீண்டும் இன்ஸ்டால் செய்துகொடுத்தான். அவன் எனக்கு பேஸ்புக் அக்கவுண்டும் ஓப்பன் செய்து தந்தான். அதில் நிறைய விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தான். அதோடு நல்ல மெசேஜ்களையும், படங்களையும் எனக்கு ஷேர் செய்துகொண்டிருந்தான்.

ஒருமுறை என் மகன் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டான். மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, உதவிக்கு ஆள் இன்றி நான் தவித்தபோது, அவன் வந்து எனக்கு பல்வேறு விதங்களில் உதவினான். அதனால் நான் அவனிடம் நன்றி பாராட்டத் தொடங்கினேன். அதன் பிறகு என் வீட்டிற்கும் வந்து போயிருந்தான். முதுமையில் தள்ளாடிக்கொண்டிருக்கும் என் அம்மாவிடமும் நல்ல பெயர் வாங்கிவிட்டான். அதனால் அவன் வீட்டிற்கு வந்துபோவது அதிகரித்தது. அது அக்கம்பக்கத்தினர் கண்களை உறுத்தும் நிலை உருவானது.

அன்று நான் நகைக் கடையில் வேலையில் இருந்துகொண்டிருந்தபோது திடீரென்று என் அருகில் வந்து, ‘என் நண்பனுக்கு அனுப்ப வேண்டிய ஒரு வீடியோவை தவறுதலாக உங்களுக்கு அனுப்பிவிட்டேன். அதை பார்க்காமல் உடனே டெலிட் செய்துவிடுங்கள்’ என்றான். நானும் சரி என்று கூறி அவனை அனுப்பிவிட்டு சிறிது நேரம் கழித்து அதை பார்த்தேன். அவன் குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பியிருக்கிறான். நான் அதை தவறாக எடுத்துக்கொள்ளாமல் டெலிட் செய்துவிட்டேன்.

எனது தாயாரை எங்கள் நெருக்கமான உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்கு காரில் அழைத்துச்சென்று இரண்டு நாட்கள் அங்கேயே தங்கவைத்து உபசரித்து அனுப்புவதாக கூறி கூட்டிச்சென்றிருந்தார். அப்போது ஒருநாள் நானும் விடுமுறை எடுத்துவிட்டு குழந்தையுடன் வீட்டில் இருந்தேன். அவன் திடீரென்று வந்தான். நானும் வரவேற்று பேசிக்கொண்டிருந்தேன். குழந்தையோடு விளையாடினான். குழந்தை சிறிது நேரத்தில் தூங்கியதும், அவனது போனில் இருந்த வீடியோ ஒன்றை எனக்கு காட்டினான்.

அதை பார்த்ததும் நான் அதி்ர்ந்துவிட்டேன். நகைக் கடையில் என்னை போன்ற பெண்களுக்கு தனி சீருடை உண்டு. அதை அணிய தனி அறையில் நாங்கள் உடைமாற்றுவோம். அதில் நான் சுதந்திரமாக உடை மாற்றுவதை படமாக்கிவைத்திருந்தான். அவன் நோக்கம் எனக்கு புரிந்தது, அவனை கண்டபடி தி்ட்டி வீட்டைவிட்டு வெளியேறும்படி கூறினேன். உடனே அவன் இன்னும் சில படங்களை காட்டினான். அதில் அவன் அருகில் நான் மிக மோசமாக நின்றுகொண்டிருந்தேன். அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. எப்படி அந்த காட்சிகளை உருவாக்கினான் என்று எனக்கு தெரியவில்லை.

நான் அது பற்றி அவனிடம் விளக்கம் கேட்க, ‘அதை எல்லாம் சொல்ல முடியாது. உங்கள் மீது எனக்கு ஆசையாக உள்ளது. எனக்கு இடம்கொடுத்தால் இந்த போனையே உங்கள் கையில் கொடுத்துவிடுகிறேன். எல்லாவற்றையும் நீங்களே அழித்துக்கொள்ளுங்கள். நீங்கள் இடம்கொடுக்காவிட்டால் இ்ந்த காட்சிகளை எல்லாம் நிறைய பேருக்கு ஷேர் செய்வேன்’ என்றான். நான் ஆவேசமானேன். தன்னிலை மறந்து துடைப்பத்தால் அவனை அடித்து உதைத்ததோடு, போனையும் பிடுங்கி உடைத்துவிட்டேன்.

என்னிடம் அடிவாங்கிவிட்டு அவமானத்தோடு வெளியே சென்றவன், உடனே என்னை பழிவாங்க முடிவுசெய்துவிட்டான். எனக்கும்- அவனுக்கும் திருட்டு்த்தனமான உறவு இருப்பதாக அக்கம்பக்கத்தில் பரப்பிவிட்டான். நான் போனை உடைத்தாலும், அந்த காட்சிகளை எல்லாம் எங்கோ பதிவுசெய்துவைத்திருக்கிறான். அதை என் கணவருக்கும் அனுப்பிவிட்டான்.

அவர் எனக்கு தெரியாமலே சொந்த ஊர் திரும்பி, என்னை பற்றி பலரிடம் விசாரித்திருக்கிறார். அவன் அடிக்கடி வீட்டுக்கு வந்துசென்றதால், பலரும் ‘எனக்கும்- அவனுக்கும் தொடர்பு இருப்பதாக’ கூறிவிட்டார்கள். அதனால்தான் என் கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிவிட்டார்” என்றாள்.

இப்படி சந்தர்ப்பங்களும், சாட்சியங்களும் பெரும்பாலும் பெண்களுக்கு எதிராக அமைந்துவிடுவதால், ஆண்களுடனான நட்பை எப்போதும் எல்லையோடு வைத்திருப்பது மிக மிக அவசியம்..!

- உஷாரு வரும்.

மேலும் செய்திகள்