காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு பரிசல் இயக்க தடை

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்துள்ளது.

Update: 2019-11-10 23:00 GMT
பென்னாகரம்,

கர்நாடக, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் வினாடிக்கு 8 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.

இந்தநிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் தமிழக, கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தண்ணீரின் அளவை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் மீண்டும் தடை விதித்து உள்ளது. மேலும் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் மெயின் அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே நேற்று வார விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் காவிரி கரையோரம் குளித்து மகிழ்ந்தனர். மேலும் தொங்கு பாலம், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரியின் அழகை கண்டு ரசித்தனர்.

மேட்டூர்

இதே போல மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 14 ஆயிரத்து 784 கனஅடியாக இருந்தது. பாசன தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் நீரை விட பாசனத்துக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைவாக இருப்பதால் அணை நீர்மட்டம் சிறிதளவு உயர வாய்ப்புள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 119.11 அடியாக இருந்தது.

மேலும் செய்திகள்