திருப்பூர்-பல்லடம் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகள் - வாகன ஓட்டிகள் அவதி

திருப்பூர்-பல்லடம் ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள்.

Update: 2019-11-10 22:00 GMT
திருப்பூர், 

வாகன போக்குவரத்து அதிகமாக உள்ள மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் ஒன்று. இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். மேலும், ஆடைகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஜாப் ஒர்க் செய்வதற்கு பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்களில் அனுப்பிவைக்கப்படுகின்றன.

இவ்வாறாக திருப்பூரே பரபரப்பாக இயங்கி வந்து கொண்டிருக்கும். இந்த சாலைகளில் திருப்பூர்-பல்லடம் ரோடு முக்கிய சாலையாக இருந்து வருகிறது. இந்த சாலையில் தான் கலெக்டர் அலுவலகம் உள்ளது. இதனால் பல்வேறு கோரிக்கை புகார் கொடுக்க செல்லும் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அதிகளவு இந்த சாலையை பயன் படுத்தி வருகிறார்கள். இப்படிப்பட்ட பல்லடம் ரோட்டில் மாடுகள் சுற்றித்திரிகின்றன.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:- பல்லடம் ரோட்டை தினமும் ஏராளமான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகிறோம். தற்போது கடந்த சில நாட்களாக இந்த ரோட்டில் மாடுகள் அங்கும், இங்குமாக சுற்றித்திரிந்து வருகின்றன. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைகிறோம்.மாடுகள் திடீரென குறுக்கே வருவதால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சில நேரங்களில் இந்த மாடுகள் ரோட்டிலேயே படுத்துகிடக்கின்றன. எனவே மாநகராட்சி நிர்வாகம் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த மாடுகளின் உரிமையாளர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும். அவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்