அயோத்தி வழக்கு தீர்ப்பை தே.மு.தி.க. மதிக்கிறது - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை தே.மு.தி.க. மதிக்கிறது என்று கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் பேட்டி அளித்தார்.

Update: 2019-11-10 23:00 GMT
திருப்பரங்குன்றம், 

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருப்பரங்குன்றம் வந்தார். அவருக்கு மதுரை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் உயர் மட்ட குழு உறுப்பினர் பாலன், மாவட்ட செயலாளர் கணபதி, விசாரணை குழு உறுப்பினர் அழகர்சாமி, முன்னாள் மாவட்ட அவைத் தலைவர் நெடுமாறன் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட அவைத்தலைவர் தனபாண்டியன், மாவட்ட துணைச்செயலாளர் பசுமலை அருள் பகுதி செயலாளர் சங்கிலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து மதுரை பசுமலையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

நம்மிடம் அன்பு இருந்தால் செல்வம் வெற்றி நம்மை தேடிவரும். அன்பு இருக்கும் இடத்தில் வெற்றி செல்வம் இருக்கும். சோதனைகள் வரலாம் ஆனால் இறுதியில் தர்மமே வெல்லும். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தே.மு.தி.க அங்கம் வைத்த அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதேபோல நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிட்ட அழகர்சாமிக்கு பேராதரவு தந்து வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத்தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேப்டனுக்கு ரஜினிகாந்த் நல்ல நண்பர். தமிழக அரசியலில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை. வெற்றிடத்தை நிரப்புவது பொதுமக்கள் தான். உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி ஒரு வாரத்தில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க வெற்றி தொடரும். அயோத்தி தீர்ப்பை உலகமே எதிர்பார்த்தது. இந்துக்களுக்கு ராமர் கோவில் கட்ட அனுமதியும், இஸ்லாமியர்களுக்கு பாபர் மசூதிக்கு இடம் ஒதுக்கீடு வழங்கிய தீர்ப்பை தே.மு.தி.க மதிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்