முத்தியால்பேட்டை, ரவுடி கொலை வழக்கில் 4 பேர் சிக்கினர் - ரகசிய இடத்தில் வைத்து விசாரணை

முத்தியால்பேட்டை ரவுடி கொலை வழக்கில் 4 பேர் சிக்கினர். அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-11-11 21:45 GMT
புதுச்சேரி,

முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் தெருவை சேர்ந்தவர் அன்புரஜினி (வயது 35). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் ரவுடிகள் பட்டியலில் வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்பு ரஜினி தனது நண்பர்கள் 4 பேருடன் காலாப்பட்டு பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவரும், நண்பர்களும் காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

முத்தியால்பேட்டை முத்தையா முதலியார் வீதி, சாலைத்தெரு சந்திப்பில் வந்தபோது அவரது காரை பின்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் திடீரென அவரது காரின் முன்பக்கத்தில் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அதனால் அதிர்ச்சி அடைந்த அன்பு ரஜினி மற்றும் அவரது நண்பர்கள் காரில் இருந்து இறங்கி ஓடினர். ஆனால் அவர்கள் அன்புரஜினியை சுற்றி வளைத்து கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் மற்றும் அவரது கூட்டாளிகள் சூர்யா, நிவாஸ், ஜெரோம், சந்துரு உள்ளிட்டோர் சேர்ந்து இந்த கொலையை செய்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீராம், சூர்யா, நிவாஸ், ஜெரோம் ஆகிய 4 பேரும் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சோழனுக்கும், அன்புரஜினிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சோழன் தற்போது சந்திரசேகரன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சோழனின் நண்பரான வினோத் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் கைதானவர்கள் ஜாமீனில் வெளியே வர அன்பு ரஜினி பல உதவிகளை செய்து வந்ததாக தெரிகிறது.

வினோத் கொலையில் அன்புரஜினிக்கு தொடர்பு இருக்கும் என்ற சந்தேகம் சோழனுக்கு ஏற்பட்டது. எனவே வினோத் கொலைக்கு பழிக்குப்பழியாக அன்புரஜினியை கொலை செய்ய சோழன் முடிவு செய்தார். அவருக்கு ஜெயிலில் உள்ள மற்றொரு கைதி பாண்டியன் உதவி செய்தார். அதையடுத்து சோழன், பாண்டியன் ஆகியோர் தூண்டுதலின்பேரில் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் உள்பட 5 பேர் அன்புரஜினியை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. பிடிபட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்