ஆலங்குடி அருகே சோக சம்பவம்: சாவிலும் இணைபிரியாத நூறு வயதை கடந்த தம்பதி கிராம மக்கள் அஞ்சலி

ஆலங்குடி அருகே சாவிலும் இணைபிரியாத நூறு வயதை கடந்த தம்பதிக்கு கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

Update: 2019-11-12 22:45 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடி கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 104). இவருடைய மனைவி பிச்சாயி (100). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்து அவர்களுக்கு மகன்கள், மகள்கள், பேரன்-பேத்திகள் என 23 பேர் உள்ளனர். கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக வெற்றிவேல் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை அவரது மகன்கள் கவனித்து வந்தனர்.

இந்நிலையில் வெற்றிவேல் நேற்று அதிகாலை 2 மணிக்கு உயிரிழந்தார். அப்போது அவரது மனைவி பிச்சாயியும் உடனிருந்தார். அவர் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் அழுது கொண்டே இருந்தார். அவரிடம் உறவினர்கள் ஆறுதல் கூறிக்கொண்டி ருந்தனர். இருப்பினும் அவர் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் காலை 5 மணிக்கு மயக்கம் அடைந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயன்ற போது, அவரும் இறந்தது தெரியவந்தது.

கிராம மக்கள் அஞ்சலி

வயதான தம்பதி இருவரும் இறந்த சம்பவம் அறிந்து குப்பகுடி மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராம மக்களும் அங்கு திரண்டு வந்து, வெற்றிவேல்-பிச்சாயி தம்பதியின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவர்களது உடல்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

கணவர் இறந்த 3 மணி நேரத்தில் மனைவியும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த வெற்றிவேல், பிச்சாயி தம்பதியை விட சுற்றுவட்டார கிராமங்களில் வயதில் மூத்த தம்பதி எவரும் இல்லையென அஞ்சலி செலுத்தி வந்தவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்