தொழிலாளி கொலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு

தொழிலாளி கொலை வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2019-11-12 22:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள வெதரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அக்குமாரி (வயது 40). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அக்குமாரியின் அண்ணன் சென்னகேசவன். இவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டிட பணிகளை செய்து வந்தார். சென்னகேசவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சென்னகேசவனை சின்னசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தாக்கினார்கள். இதை தடுக்க சென்ற அக்குமாரி, சதீஷ் ஆகியோரை கத்தியால் குத்தினார்கள். இதில் படுகாயமடைந்த அக்குமாரி பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக கம்பைநல்லூர் போலீசார் கொலைவழக்கு பதிவு செய்து சின்னசாமி(63) அவருடைய மனைவி கோவிந்தம்மாள் (57), மகன்கள் வசந்த் (31), ரஞ்சித் (35) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் முடிவில் கொலை குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து சின்னசாமி, கோவிந்தம்மாள், வசந்த், ரஞ்சித் ஆகிய 4 பேருக்கும் ஆயுள்தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி ஜீவானந்தம் நேற்று தீர்ப்பளித்தார்.

இந்தநிலையில் வசந்த் நேற்று கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். தொழிலாளி கொலை வழக்கில் பெற்றோர் மற்றும் 2 மகன்கள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்