ராயப்பேட்டை வணிக வளாகத்தில் விஷவாயு தாக்கி வாலிபர் சாவு தம்பியை காப்பாற்றியவருக்கு நேர்ந்த சோகம்

ராயப்பேட்டை வணிக வளாகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மயங்கி விழுந்த தம்பியை காப்பாற்றிய வாலிபர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-11-12 23:00 GMT
சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ’ வணிக வளாகத்தின் கீழ்தளத்தில் நேற்று அதிகாலை 4 மணியளவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

இந்த பணியில் ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 26), அவரது தம்பி ரஞ்சித்குமார்(22) மற்றும் அதே பகுதியை சேர்ந்த யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் ஆகிய 5 பேரும் ஈடுபட்டனர்.

இவர்கள் 5 பேரையும் அதேபகுதியை சேர்ந்த ஒப்பந்ததாரர் தண்டபாணி என்பவர் பணிக்கு அழைத்து வந்து இருந்தார். ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் அவர் தொட்டிக்குள் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது அண்ணன் அருண்குமார், தம்பியை காப்பாற்ற கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார்.

அங்கிருந்தவர்கள் உதவியுடன் ரஞ்சித்குமாரை மேலே தூக்கிவிட்டார். ரஞ்சித்குமார் சிறிதளவு மயங்கிய நிலையில் இருந்தார். பின்னர் அருண் குமார் மேலே ஏற முயற்சித்தார்.

ஆனால் அருண்குமாரையும் விஷவாயு தாக்கியதால் அவர் தொட்டிக்குள் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அங்கு இருந்தவர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை. உடனடியாக இதுபற்றி அண்ணாசாலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் மயங்கிய நிலையில் இருந்த ரஞ்சித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அருண்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கழிவுநீர் அகற்றும் பணியின்போது தொழிலாளர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காத ஒப்பந்ததாரர் தண்டபாணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பியை காப்பாற்றிய அண்ணன் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்