மது வாங்க பணம் தர மறுத்ததால், தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் பரிதாப சாவு - கணவர் கைது

மது வாங்க பணம் தர மறுத்ததால் தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-11-15 22:15 GMT
பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரங்கோடு அரசு தேயிலை தோட்டம் ரேஞ்சு-1 பகுதியை சேர்ந்தவர் கணே‌‌ஷ் ராஜ்(வயது 42). தொழிலாளி. இவருடைய மனைவி சிட்டு(36). மதுப்பழக்கத்துக்கு அடிமையான கணே‌‌ஷ் ராஜ், தினமும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, போதையில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். மேலும் மது வாங்க பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்து உள்ளார்.

கடந்த மாதம் 28-ந் தேதி கணே‌‌ஷ் ராஜ் மது வாங்க சிட்டுவிடம் பணம் கேட்டு உள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கணே‌‌ஷ் ராஜ் வீட்டில் இருந்த மண் எண்ணெயை எடுத்து சிட்டு மீது ஊற்றி தீ வைத்து விட்டார். தீயில் கருகிய அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். உடனே அங்கிருந்து கணே‌‌ஷ் ராஜ் தப்பி ஓடிவிட்டார். பின்னர் படுகாயம் அடைந்த சிட்டுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதனிடையே உடல் நிலை மோசமானதை தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நீதிபதி அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது மது வாங்க பணம் கொடுக்காததால் தன் மீது கணே‌‌ஷ் ராஜ் மண் எண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டதாக வாக்குமூலம் அளித்தார். பின்னர் கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிட்டு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மது வாங்க பணம் தர மறுத்த மனைவியை மண் எண்ணெயை ஊற்றி எரித்து கொலை செய்ததாக கணே‌‌ஷ் ராஜை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்