காரில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் - 2 பேர் கைது

நாகூரில் காரில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

Update: 2019-11-15 22:45 GMT
நாகூர்,

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் அறிவுறுத்தலின்படி மதுபாட்டில் மற்றும் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் நேற்று அதிகாலை நாகூர் போலீசார் மேல வாஞ்சூர் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 1,440 மதுபாட்டில்கள் இருந்தது.

இதை தொடர்ந்து காரில் வந்த 2 பேரை கீழ்வேளூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் மோகன்தாஸ் (வயது 32), கலியபெருமாள் மகன் ரமேஷ் (42) என்பதும், இவர்கள் காரைக்காலில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு காரில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்தாஸ், ரமேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள 1,440 மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்