ராயபுரத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி சாவு

ராயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்தார். டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-11-15 23:15 GMT
திருவொற்றியூர், 

திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் வள்ளுவர் நகர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி மாலினி (வயது 28). கர்ப்பிணியாக இருந்த இவர் கடந்த 11-ந்தேதி பிரசவத்திற்காக ராயபுரம் ஆர்.எஸ்.ஆர்.எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மதியம் மாலினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நன்றாக இருந்தது. ஆனால் தாய் மாலினி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாலினியின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தனர். திடீரென மருத்துவமனை முன்பு திரண்ட அவர்கள் கூறியதாவது:-

மாலினி அறுவை சிகிச்சை நடந்த நாள் முதல் வலி ஏற்பட்டதாக டாக்டர்களிடம் கூறி வந்தார். ஆனால் டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை.

ஆபரேஷன் செய்த இடத்தில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறுவதாக பலமுறை கூறியும் டாக்டர்கள் கண்டுகொள்ளவில்லை. டாக்டர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் மாலினி உயிரிழந்து விட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து மாலினிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

மருத்துவமனையை முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்