அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்கள் - அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா பெற்றுக்கொண்டனர்

நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Update: 2019-11-16 22:30 GMT
நாமக்கல், 

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் தொடங்கியது. அதை அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கட்சியின் மாநில மகளிர் அணி இணை செயலாளரும், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு, 5 நகராட்சிகள், 15 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 19 பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.5 ஆயிரம் செலுத்தியும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.3 ஆயிரம் செலுத்தியும் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

அதேபோல் நகர்மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.10 ஆயிரம் செலுத்தியும், நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.2 ஆயிரத்து 500 செலுத்தியும், பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.5 ஆயிரம் செலுத்தியும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.1,500 செலுத்தியும் விருப்ப மனுக்களை பெற்றனர்.

அதன்பிறகு அ.தி.மு.க.வினர் பூர்த்தி செய்யப்பட்ட விருப்பமனுக்களை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோரிடம் வழங்கினர். பின்னர் நிருபர்களிடம் பேட்டிஅளித்த அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

வரும் உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் 100 சதவீத வெற்றியை பெறுவோம். நிர்வாக வசதிக்காக செய்யப்படும் அதிகாரிகள் மாற்றம் குறித்து கருத்து கூறுவதற்கு இல்லை. அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வமும் ஏற்கனவே தெரிவித்து உள்ளார்கள். இந்த இயக்கத்திற்கு வருவதற்கு ஆர்வத்தை காட்டுவதற்காக முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முதல்-அமைச்சர் தனக்கு அழைப்பு விடுத்ததாக பரப்புகிறார். யாருக்கும் தனிப்பட்டமுறையில் அழைப்பு விடுக்கவில்லை.

பழனியப்பன் வந்து வலுபெறும் நிலையில் அ.தி.மு.க. இல்லை. அவர் வந்தால் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஆய்வு செய்து நிர்வாகத்தின் அடிப்படையில் முடிவு எடுப்பார்கள்.

தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கவும், அரசுக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தவும் எதிர்கட்சியினர் முயற்சிக்கின்றனர். அவர்கள் முயற்சி பலிக்காது. முதல்-அமைச்சர் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு நிவாரணங்களை வழங்கி உள்ளார். விவசாயிகள் ஓரிரு நாளில் முதல்-அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளனர். இந்த நிலையில் போராட்டங்களை நடத்தி திசை திருப்பவே சில அரசியல் கட்சியினர் முயற்சிக்கின்றனர். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார். 

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன், பொன்.சரஸ்வதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அவைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம், மாவட்ட பொருளாளர் டி.எல்.எஸ்.காளியப்பன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்