காரில் பெட்ரோல் குண்டுகள் வீசி டிரைவர் கொலை: சேலம் சரக டி.ஐ.ஜி. 2-வது நாளாக முகாமிட்டு விசாரணை, 2 பேர் பிடிபட்டனர்

காரில் பெட்ரோல் குண்டுகள் வீசி டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி. பிரதீப்குமார் 2-வது நாளாக ஓசூரில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார். இந்த கொலை தொடர்பாக 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.

Update: 2019-11-17 23:00 GMT
ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஆனந்த்பாபு (வயது 46). நாயக்கனப்பள்ளியில் அட்டை கம்பெனி நடத்தி வருகிறார். கடந்த 11-ந் தேதி இரவு இவரது மனைவி நீலிமா (42) காரில் தனது கம்பெனியில் இருந்து ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை கெலமங்கலம் அருகே உள்ள எச்.செட்டிப்பள்ளியைச் சேர்ந்த முரளி (25) ஓட்டிச்சென்றார்.

அந்த நேரம் சானமாவு அருகில் கார் மீது லாரி மோதி 2 வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாகவும், அதில் கார் டிரைவர் முரளி தீயில் கருகி இறந்ததாகவும், நீலிமா படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. விபத்து வழக்காக இது விசாரிக்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக இது கொலை என தெரியவந்துள்ளது. தொழில் போட்டி காரணமாக ஆனந்த்பாபு, அவரது மனைவி நீலிமா ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டு லாரியை கார் மீது மோதி, பின்னர் கார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில் மதுரையை சேர்ந்த கூலிப்படைக்கு இந்த கொலையில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஓசூர் பகுதியைச் சேர்ந்த 2 பேர் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், மதுரையை சேர்ந்த கூலிப்படையை பிடிக்க தனிப்படை போலீசார் மதுரை மற்றும் கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதிகளுக்கு விரைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரதீப்குமார் நேற்று முன்தினம் ஓசூர் வந்தார். அவர் கொலை நடந்த சானமாவு பகுதியை பார்வையிட்டார். அங்கு எரிந்த நிலையில் கிடந்த லாரி மற்றும் கார் ஆகியவற்றை பார்வையிட்ட அவர், லாரியின் உரிமையாளர் யார்? அந்த லாரி யாருக்கேனும் விற்கப்பட்டுள்ளதா? என்ற விவரங்களை கேட்டார்.

தொடர்ந்து இரவு ஓசூரில் தங்கிய டி.ஐ.ஜி. பிரதீப்குமார், நேற்று 2-வது நாளாக உத்தனப்பள்ளியில் முகாமிட்டு விசாரணை நடத்தினார். அவருடன் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதரும் விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்