சேலத்தில் காவலாளி கொலை: 2-வது மனைவியின் மகன் உள்பட 3 பேர் கைது

சேலத்தில் காவலாளி கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரின் 2-வது மனைவியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-11-17 23:00 GMT
சேலம்,

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே சுபாஷ் சந்திரபோஸ்நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவருடைய 2-வது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு அழகப்பன் (19) என்ற மகன் உள்ளார். ராமசாமி கடந்த சில நாட்களாக ஊத்துமலை அடிவாரத்தில் நொச்சிப்பட்டியார் காடு என்ற இடத்தில் பழைய இரும்பு கடையில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் இரும்பு கடையில் ராமசாமி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் 2 பேர் இரும்பு கடை உள்ள பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் சுபாஷ் சந்திரபோஷ் நகரை சேர்ந்த பிரதாப் (31), சீலநாயக்கன்பபட்டி வெடிப்புக்கல்பாறை பகுதியை சேர்ந்த அப்துல்ரகுமான் (26) ஆகியோர் என்பதும், அவர்களுக்கு உடந்தையாக இருந்த கிச்சிப்பாளையம் வரதராஜன் தெருவை சேர்ந்த பிரபு (30) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கொலையான ராமசாமியின் முதல் மனைவிக்கு 2 மகன்கள் ராசிபுரத்தில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களை பிரிந்த ராமசாமி சேலத்தில் ஏற்கனவே திருமணமான சாந்தி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். சாந்திக்கு முதல் கணவர் மூலம் பிறந்தவர் தான் தற்போது கைது செய்யப்பட்டு உள்ள பிரதாப் ஆவார்.

பிரதாப் தாய் வீட்டிற்கு அருகிலேயே ஒரு குடிசையில் வசித்து, பெயிண்டு அடிக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளதால் பணம் கேட்டு தாய் சாந்தியிடமும் மற்றும் ராமசாமியிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ராமசாமி ராசிபுரத்தில் உள்ள நிலத்தை முதல் மனைவிக்கு வழங்கி விட்டார். அவர் தற்போது வசித்து வந்த வீட்டையும் அழகப்பனுக்குதான் வழங்குவேன் என கூறியுள்ளார். பிரதாப்பின் செலவிற்கும் ராமசாமி பணம் கொடுப்பதில்லை. இவரின் குடிசைக்கு அவருடைய வீட்டில் இருந்து மின்சாரம் வழங்கவும் ராமசாமி மறுத்து விட்டார்.

மேலும் பிரதாப் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனாலும் பிரதாப்பிற்கு எந்தவிதமான உதவியும் ராமசாமி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் பிரதாப் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதனால் தன்னுடன் வேலை பார்க்கும் அப்துல் ரகுமான் மற்றும் பிரபுவிடம் இதுகுறித்து கூறியுள்ளார். சம்பவத்தன்று இரவு பிரதாப், அப்துல்ரகுமான் ஆகியோர் மதுகுடித்து விட்டு ராமசாமியை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளனர். இதற்கு உடந்தையாக பிரபு இருந்துள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பிரதாப், அப்துல்ரகுமான், பிரபு ஆகியோரை அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 3 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்