குறைதீர்க்கும் கூட்டத்தில், குடிநீர் கேட்டு 2 கிராம மக்கள் மனு

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், 2 கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர்.

Update: 2019-11-18 22:45 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றனர். அப்போது ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள வீரலப்பட்டி கிராம மக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வீரலப்பட்டியில் சுமார் 800 பேர் வசிக்கிறோம். எங்கள் கிராமத்தில் கடந்த ஓராண்டாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும் 4 குடம் குடிநீர் தான் கிடைக்கிறது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தினமும் குடிநீருக்கே குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய நேரிடுகிறது. எனவே தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதேபோல் தாடிக்கொம்பு அருகேயுள்ள உலகம்பட்டி பிரிவு பகுதியை சேர்ந்த மக்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருடன் சேர்ந்து குடிநீர் கேட்டு கோஷமிட்டபடி ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் உலகம்பட்டி பிரிவு மக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் கேட்டு போராடி வருகிறோம். இதன் காரணமாக கடந்த மாதம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதில் இருந்து தண்ணீர் எடுத்து வினியோகம் செய்யவில்லை. இதனால் குடிநீருக்காக தொடர்ந்து சிரமப்பட்டு வருகிறோம். எனவே, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உலகம்பட்டி பிரிவு பகுதிக்கு இணைப்பு கொடுத்து குடிநீர் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தனர். 

மேலும் செய்திகள்